‘சிவாய நம’ என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
ஒரு பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பரம்பொருளுக்குள் அடங்கின. இதையடுத்து அன்றைய இரவுப் பொழுதில் பார்வதி தேவி சிவபெருமானை நினைத்து பூஜை செய்தாள். அதோடு நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி அர்ச்சனையும் செய்தாள்.
சூரிய அஸ்தமன நேரம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை, பார்வதிதேவி பூஜை செய்த காலமே, ‘மகா சிவராத்திரி’ என்று அழைக்கப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி தந்தார், சிவபெருமான்.
அவரிடம் பார்வதிதேவி, “ஐயனே.. சிவராத்திரி தினத்தில் நான்கு ஜாமம் முழுவதும் தங்களை (சிவன்) நினைத்து வழிபடுபவர்களுக்கு, சகல சவுபாக்கியங்களும் தந்தருள வேண்டும். மேலும் அவர்களின் வாழ்நாள் இறுதியில் முக்தியையும் அளிக்க வேண்டும்” என்றாள்.
ஒரு முறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் இடையே ‘தங்களில் யார் பெரியவர்?’ என்ற போட்டி உருவானது. அப்போது சிவபெருமான், அடிமுடி காண முடியாத ஜோதிப் பிளம்பாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். ‘ஈசனின் முடியையோ, அடியையோ யார் முதலில் காண்கிறார்களோ, அவர்களே பெரியவர்’ என்று சொல்லப்பட்டது.
இதையடுத்து அன்னப் பறவை உருவம் எடுத்த பிரம்மன், ஈசனின் முடியைத் தேடியும், வராக வடிவம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாளத்தைத் தோண்டிய படி ஈசனின் அடியைத் தேடியும் புறப்பட்டனர்.
சிவராத்திரி விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். இவர்கள்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது.