சகல பிரச்சனைகளையும் நீக்கும் `கொங்கராயகுறிச்சி சட்டநாதர்’
அஷ்ட பைரவர் தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும்.
கோவில் தோற்றம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அழகிய தாமிரபரணி கரை கிராமம், கொங்கராயகுறிச்சி. இவ்வூரில் உள்ள சட்டநாதர் ஆலயம், மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு வாழ்ந்த கொங்குராயர் என்னும் மன்னரால், பழமையான இவ்வாலயம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. எனவே தான் இவ்வூர் ‘கொங்கராயகுறிச்சி’
என்று அழைக்கப்படுகிறது.
நவ லிங்கபுரத்தில் இரண்டாவது தலம்தான் கொங்கராய குறிச்சி சட்டநாதர் ஆலயம் ஆகும். இவ்வாலயத்தில் அஷ்ட பைரவர் தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.இவர் 64 பைரவர்களுக்கு சமமானவர். சீர்காழியைப் போலவே இவ்வூரில் பைரவர் இருக்கும் காரணத்தினால், இது ‘தென் சீர்காழி’ என்று அழைக்கப்படுகிறது.
சிவபெருமானின் முக்கியமான அவதாரங்களில் ஒன்று பைரவர். உக்கிரம் நிறைந்த இந்த பைரவர், நம்முடைய பயத்தை போக்குபவராக போற்றப்படுகிறார்.
பாவம், குரோதம், காமம் போன்றவற்றில் இருந்து பக்தர்களை விடுபடச் செய்வார். ‘பை’ என்றால் ‘படைப்பு’. ‘ர’ என்றால் ‘வாழ்க்கை’. ‘வா’ என்றால் ‘அழித்தல்’. இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் செய்யக்கூடிய தன்மை கொண்டவர் என்பதால் ‘பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
கொங்கராயகுறிச்சியில் அஷ்டமி தேய்பிறை அன்று, அஷ்ட பைரவருக்குப் பூஜை நடத்தி வருகிறார்கள். இதனால் தீராத நோய் தீரும் என்பது நம்பிக்கை.
ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை, இந்த கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெறும். இவ்வாலயம் வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும். பில்லி சூனிய பிரச்சினை அகலும்.தொழில் போட்டியில் வெற்றி பெறலாம்.
நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும். இழந்த பொருட்களை மீட்கலாம். மறைமுக எதிரிகள் விலகுவர்.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
நெல்லையில் இருந்து திருச்செந்தூர் மெயின்ரோட்டில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கருங்குளம். இங்கு இறங்கி ஆற்றுப்பாலத்தைத் தாண்டினால், அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் கொங்கராய குறிச்சி சட்டநாதர் ஆலயத்தை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு.