Trending News Tamil News Website In Trichy

Fire விமர்சனம்

0

பிசியோதெரபிஸ்ட் காசி என்கிற பாலாஜி முருகதாஸ் திடீரென்று காணாமல் போகிறார். இந்த கேஸை போலீஸ் இன்ஸ்பெக்டர் ேஜஎஸ்கே.சதீஷ் குமார் விசாரிக்கிறார். பாலாஜி முருகதாசுடன் தொடர்பில் இருந்த பெண்கள் ரச்சிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷான் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தும்போது, பல அதிரடி தகவல்கள் கிடைக்கிறது. அமைச்சர் சிங்கம்புலிக்கும், பாலாஜி முருகதாசுக்கும் என்ன தொடர்பு என்று ஜேஎஸ்கே.சதீஷ் குமார் கண்டுபிடிக்கிறார். 4 பெண்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்ததுடன், அவர்களுடன் நெருங்கிப் பழகிய பாலாஜி முருகதாசைக் கொன்றதாக, வாட்ச்மேன் எஸ்.கே.ஜீவா போலீசில் சரணடைகிறார். இதனால் குழம்பும் ஜேஎஸ்கே.சதீஷ் குமார், உண்மையில் என்ன நடந்தது என்று கண்டுபிடிக்கிறார். பாலாஜி முருகதாஸ் உயிருடன் இருக்கிறாரா? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தீர்வு கிடைத்ததா என்பது மீதி கதை.

நாகர்கோயில் உண்மைச் சம்பவத்தை வைத்து, பெண்களின் விழிப்புணர்வுக்காக சமூக அக்கறையுடன் இப்படத்தை இயக்கியுள்ள ஜேஎஸ்கே.சதீஷ் குமாருக்கு பாராட்டுகள். கத்தி மேல் நடக்கும் கதையும், காட்சிகளும் ரசிகர்களைப் பதற வைத்தாலும், காட்சிகளை நாசூக்காகப் படமாக்கியுள்ளார். காசியாக வரும் பாலாஜி முருகதாஸ், பெண்களை தன் விருப்பத்துக்கு விருந்தாக்கி, பிறகு முக்கியமான புள்ளிகளுக்குப் பரிமாறி பணம் பறிக்கும் பச்சோந்தி கேரக்டரில் நடித்து, பெண்களின் சாபத்தை வாங்குகிறார். 4 பெண்களுடனான பெட்ரூம் காட்சிகளில் வாழ்ந்திருக்கிறார். மற்ற ஹீரோக்கள் அவரைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். அவரது வார்த்தையில் மயங்கி மனதைப் பறிகொடுக்கும் சாந்தினி தமிழரசன், எசகுபிசகாக சிக்கிக்கொண்டு தவிக்கும் சாக்‌ஷி அகர்வால், மழை பாடலில் ரசிகர்களைச் சூடேற்றும் ரச்சிதா மகாலட்சுமி, நெருக்கமான காட்சியில் நடித்த காயத்ரி ஷான் ஆகியோர், அவரவர் கேரக்டருக்கு வலு சேர்த்துள்ளனர். என்றாலும், ‘பெட்ரூம் காட்சியில் நடித்தது இவர்களா?’ என்று ஆச்சரியமாக இருக்கிறது.

 

 

இப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஜேஎஸ்கே.சதீஷ் குமார், கதையின் நாயகன் மாதிரி வந்து, பாலாஜி முருகதாசைக் கண்டுபிடிப்பதில் புத்திசாலித்தனத்தைக் காட்டி விறுவிறுப்பை அதிகரித்துள்ளார். பாலாஜி முருகதாசின் பெற்றோரும், சாந்தினி தமிழரசனின் தாத்தா எஸ்.கே.ஜீவாவும் மனதில் பதிகின்றனர். சிங்கம்புலியின் அலப்பறையும், கன்னத்தில் வாங்கும் பளார் அறையும் செம கலகலப்பு. சுரேஷ் சக்ரவர்த்தி, அனு விக்னேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். கிரைம் சஸ்பென்ஸ் திரில்லருக்கான காட்சிகளை சதீஷ்.ஜியின் கேமரா நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளது. எஸ்.கே.ஜீவாவின் வசனங்கள் யதார்த்தமாக இருக்கின்றன. டிகே இசையில் பாடல்கள் மனதை ஈர்க்கின்றன. பின்னணி இசை, காட்சிகளை விறுவிறுப்பாக்க உதவியுள்ளது. இன்றைய பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சொல்லி, அவர்களின் பாதுகாப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் என்பதால் பாராட்டலாம், பார்க்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.