திருச்சி
*தமிழகத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அனைவரும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம்- மோடி அரசாங்கம் போல் வெறுப்பு அரசியல் நடத்தவில்லை- முதலமைச்சர் பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் பேச்சு*
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மணிகண்டம் ஒன்றியம் திமுக திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் இன்று நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் துணைவேந்தர் கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்.. படிப்பு தான் குழந்தைகளுக்கு மிக முக்கியம் நான் படித்து டாக்டர் பட்டம் வாங்கி பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக உள்ளேன். கைகட்டி வாழ்ந்த சமூகத்தில் பிறந்த என்னை டை கட்டி துணைவேந்தர் ஆக்கிய பெருமை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களையே சேரும், இந்தியாவில் பெண்கள் 66% விழுக்காடு படிக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான், ஏனென்றால் இங்கு இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், முதல்வர் மருந்தகம் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உங்களுக்காகவே நடைபெறக்கூடிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. மத்தியில் ஒன்றிய மோடி ஆட்சி செய்கிறது. இப்பொழுது இங்கு கிறிஸ்தவ கோயிலில் மணி அடித்தபோது பொதுக்கூட்டத்தில் நாம் பேச்சை நிறுத்தினோம். அதுபோல முஸ்லீம் கோயில்களில் இருந்து பாங்கு ஒலி கேட்டாலும் பொதுக்கூட்டங்களில் நாம் நிறுத்துவது வழக்கம் இதெல்லாம் செய்வது நாம் ஒருவருக்கொருவர் அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறோம் என்ற சமுதாய நல்லிணக்கத்தோடு வாழ்கிறோம் என்ற நோக்கத்தில் தான். இந்த சகோதரத்துவம் இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இதே போல் குஜராத்தில் இந்த சம்பவம் நடந்திருந்தால் இந்நேரம் கிறிஸ்துவ கோவிலில் சப்தம் வரக்கூடாது என வெறுப்பு அரசியல் நடத்தக்கூடியவர்கள் இந்த மோடி அரசாங்கம் என பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மணிகண்டம் ஒன்றிய கழகச் செயலாளர் கருப்பையா, ஸ்ரீரங்கம் தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் லட்சுமணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.