நேற்று வரை நடிகராக இருந்து கொண்டு இன்று உரத்த குரலில் திமுகவை விமர்சிப்பவரையும், வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்கள் என எல்லோரையும் திமுக எதிர்கொண்டு வெற்றி பெறும் திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேச்சு
திருச்சி
நேற்று வரை நடிகராக இருந்து கொண்டு இன்று உரத்த குரலில் திமுகவை விமர்சிப்பவரையும், வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்கள் என எல்லோரையும் திமுக எதிர்கொண்டு வெற்றி பெறும் திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேச்சு
தி.மு.க விவசாய தொழிலாளர் அணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா வாழ்த்து கவியரங்கம் அந்த அணியின் மாநில செயலாளர் அன்னியூர் சிவா தலைமையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பின் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் எம்பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,
முதலமைச்சராக இருக்கும் மு க ஸ்டாலினை பார்த்து யார் யாரோ எல்லாம் கைகளை உயர்த்தி உரத்த குரலில் பேசுகிறார்கள். நேற்று வரை நடிகராக இருந்து இன்று அரசியலுக்கு வந்து ஒருமுறை கூட பொதுமக்களை சென்று சந்திக்காதவர் கூட்டரங்களில் கூட்டத்தை நடத்திக் கொண்டு எங்களின் முக்கிய எதிரி திமுக தான் என கூறுகிறார் என்றால் அவரையும் திமுக சந்திக்கும். 2026 இல் மீண்டும் முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர் தான் வருவார்கள்.
உரத்த குரலில் பேசுபவர்களுக்கு பதில் அளிக்காமல் முதலமைச்சர் ஏதோ அமைதியாக இருக்கிறார் என்றால் ஆழமான செயல்பாட்டில் ஈடுபட உள்ளார் என்பது அர்த்தம்.
திமுகவை அகற்ற வேண்டும் என ஒன்றியத்தில் ஆளக்கூடியவர்கள் முட்டி மோதி பார்க்கிறார்கள். இதுவரை ஒரு இடம் கூட அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.
பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் எனக் கூறியவர்கள் இன்று ஓடி சென்று பாஜகவுடன் கூட்டணி வைக்கிறார்கள். இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்கிறார்கள்.
நாம் அவர்கள் அனைவரையும் சந்திக்க தயாராக இருப்போம் முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்துவோம்.
முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவை நூறாண்டுகள் வரை நடத்த தயாராக இருக்கிறோம். பல்லாண்டு காலம் அவர் முதலமைச்சராகவே இருக்க வேண்டும் என்கிற அவாவையும் நாங்கள் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
முதலமைச்சர் காட்டும் திசை நோக்கி எங்களின் பட்டாளம் நிச்சயம் பாயும், வெற்றியும் பெறும்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருச்சி மத்திய மண்டலத்தில் 44 தொகுதிகளில் ஒரு சில இடங்களில் தான் தோல்வியடைவோம் என நான் கூறினேன் அதேபோல நான்கு இடங்களில் மட்டும் தான் தோல்வி அடைந்து 40 இடங்களில் திமுக வெற்றி பெற்றது.
மீண்டும் அதே வெற்றியை நாங்கள் தேடித் தருவோம்.
புதுச்சேரியிலும் திமுக முதலமைச்சர்கள் நிச்சயம் வருவார்கள் அதனை முக ஸ்டாலின் உருவாக்கி காட்டுவார் என்றார்.
வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில்,
தமிழ்நாட்டில் எப்படியாவது புகுந்து விடலாம் என ரகசியமாக பேசி கூட்டணி வைப்பவர்களை பார்த்து கொண்டு தான் உள்ளோம்.
எது நடந்தாலும் நமக்கு கவலை இல்லை யார் நம்மை எதிர்த்து போட்டி போடுகிறார்களோ அவர்கள் இரண்டாம் இடத்துக்கு தான் போட்டி போடுகிறார்கள் தவிர முதல் இடம் திமுகவிற்கு தான் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
தான் செய்யும் சாதனைகள் மூலமாக மக்கள் மனங்களில் நிறைந்து இருப்பவர் தமிழக முதலமைச்சர் என்பதை மக்களே ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என முதலமைச்சர் கூறியுள்ளார் பிறந்த நாளில் கூட தமிழ்நாட்டைப் பற்றி சிந்திக்கக்கூடிய முதலமைச்சருக்கு தான் இது போன்ற பிறந்தநாள் விழாக்களை நாம் கொண்டாடி வருகின்றோம் இது ஏதோ சடங்கோ சம்பிரதாயமும் அல்ல.
ஆற்றல்மிக்க விவசாயி இங்கு அமர்ந்து இருக்கக்கூடிய கே என் நேரு அவர் எப்பொழுதும் தன்னுடைய விவசாயத்தின் மீதும் தன்னிடத்தின் மீதும் அக்கறை கொண்டவர். இதே போல் தான் ஜெகத் ரட்சகன் அவர்களும்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வாரியத்தை உருவாக்கியவர் கலைஞர் தான். அதில் விவசாய தொழிலாளர்களுக்கும் தனி அமைப்பை உருவாக்கி அவர்களுக்கு நிதியை வழங்கியவர் கலைஞர் தான்.
அந்த அடிப்படையில் தான் விவசாயிகளுக்கும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்து வருகிறார் இந்தியாவில் வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் கொண்டு தந்தவர் நம்முடைய முதலமைச்சர்தான்.
எல்லோருக்கும் எல்லாம் என்கிற நிலையில் முதலமைச்சர் செயல் பட்டு வருகிறார் எல்லா தரப்பு மக்களையும் உயர்த்த வேண்டும் என்கிற அடிப்படையில் அவருடைய திட்டங்கள் உள்ளது .
என்றென்றும் நாம் முதலமைச்சர் பின்னால் நிற்போம் என்பதை அவருடைய பிறந்தநாள் விழாவில் உறுதி ஏற்போம் என்றார்.
வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசுகையில்,
அமைச்சராக இருப்பவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பார்கள் எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனால் நாங்கள் படும்பாடு எங்களுக்கு தான் தெரியும்.
கே என் நேருவின் சொந்த ஊரான காணக்கிளிய நல்லூர் கரடு முரடான ஊராக இருந்தது இன்று அந்த ஊரின் நிலையை மாறி உள்ளது
அங்கு காவல் நிலையம் தாலுகா அலுவலகம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் வந்துள்ளது. பசுமை நிறைந்த ஊராக அது இருக்கிறது.
கள்ள டிக்கெட், லாட்டரி விற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் இன்று திமுக குறித்து கருத்து பேசுகிறார்கள்.
விவசாய தொழிலாளர்கள் மரணமடைந்தால் இழப்பீடு தொகையாக ஒரு லட்சம் இருந்தது தற்போது 2 லட்சமாக அது உயர்த்தப்பட்டுள்ளது.
விபத்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டால் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது தற்பொழுது அது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இறுதி சடங்கிற்கு 2500 ரூபாய் வழங்கியதை தற்பொழுது 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாய தொழிலாளர்களை நம்முடைய முதலமைச்சர் கவனித்து வருகிறார் என்றார்.
தொடர்ந்து கவிஞர் கவிதை பித்தன் தலைமையில் நடந்த கவியரங்கில் கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக விவசாய தொழிலாளர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.