Trending News Tamil News Website In Trichy

நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார்கள் – அமைச்சர் கே என் நேரு பேச்சு

0

திருச்சி

நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார்கள் – அமைச்சர் கே என் நேரு பேச்சு

ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் இந்தியை திணிக்க முயற்சிப்பதையும், தொகுதி மறுவரையறை செய்து தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதையும் கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்கிற மையக்கருத்தில் கண்டன பொதுக்கூட்டம் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்.

அதில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு,

ஒன்றிய அரசு தமிழகத்தின் மீது நிதி நெருக்கடியை உண்டாக்குகிறார்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்குவோம் எனக் கூறிவிட்டு நாம் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால் அந்த நிதியை வேறு மாநிலங்களுக்கு தந்துள்ளார்கள்.

தமிழக அரசு நிறைவேற்றும் திட்டங்களுக்கு நிதியை குறைத்தும் தாமதப்படுத்தியும் அல்லது தராமலும் ஒன்றிய அரசை இருந்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு மூன்று புயல்கள் வந்து தமிழகம் பாதிக்கப்பட்டது அதற்கு நிவாரண தொகையாக 36,000 கோடி கேட்ட பொழுது ஒன்றிய அரசு வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே தந்தார்கள். அந்தத் தொகையும் ஒன்றிய அரசிலிருந்து பேரிடர் நிவாரண நிதியாக ஒவ்வொரு ஆண்டும் வரவேண்டிய நிதிதான். அதையும் இழுத்தடித்து காலதாமதப்படுத்திய வழங்கினார்கள்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் எந்த திட்டமும் நிறைவேற்றப்பட்டதில்லை. அவர்கள் இன்று நம்மை பார்த்து தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்கிறார்கள்.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. அறிவிக்காத வாக்குறுதிகளையும் முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில் திமுக கூட்டணி எல்லா தேர்தல்களும் வெற்றி பெற்று வருகிறது.

ஆனால் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 உறுப்பினர்களுக்கு ஒன்றிய அரசு எந்த மதிப்பும் அளிப்பதில்லை தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை. ஒன்றிய அரசு என்ன நினைக்கிறார்களோ அதை தான் செய்து வருகிறார்கள்.

39 பேர் இருந்தும் எதுவும் செய்யாமல் இருப்பவர்கள் அதை 31 பேராக தொகுதி மறுவரையின் மூலம் குறைக்க பார்க்கிறார்கள்.

தொகுதி மறுவரையறையின் மூலம் உத்திரபிரதேசத்தில் 80 லிருந்து 138 தொகுதியாக உயரும். ஆனால் தமிழகத்தில் 39 இல் இருந்து 31 ஆக குறையும்.

நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார்கள்.

820 பேர் அமரும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஏற்கனவே கட்டிவிட்டார்கள் இந்தத் திட்டத்தை ஆர் எஸ் எஸ் முன்பே செய்து விட்டது.

இதற்கு உடனடியாக குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். அதில் நான்கு கட்சிகளை தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

அடுத்ததாக அண்டை மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்து வரும் 22 ஆம் தேதி முதல் அமைச்சர்களுக்கான கூட்டத்தை கூட்ட உள்ளார்கள்.

இந்தியாவில் எந்த முதலமைச்சரும் இதனை முன்னெடுக்கவில்லை தமிழக முதலமைச்சர்தான் முன்னெடுத்துள்ளார்.

நம்முடைய முதலமைச்சர் தமிழகத்திற்கு மட்டும் முதலமைச்சராக இல்லை எதிர்க்கட்சியாலும் அனைத்து மாநிலங்களுக்கும் முதலமைச்சராக இருந்து இதனை முன்னெடுத்து செல்கிறார்கள்.

தொகுதி மறு வரை செய்தால்

உத்திரபிரதேசம், பீகார் மத்திய பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் வெற்றி பெற்றால் போதும் இந்தியாவை ஆட்சி செய்யலாம் என்கிற நிலை ஏற்படும். தென் மாநிலங்களை குறித்து எந்த கவலையும் பட தேவையில்லை அதற்காக தான் பா.ஜ.க தொகுதி மறுவறையை செய்ய பார்க்கிறார்கள்.

இந்தி ஆட்சி மொழி அல்ல அது ஒரு வழக்காடு மொழி தான் அதனை தமிழகத்தில் திணிக்க பார்க்கிறார்கள்.

நம்முடைய முதலமைச்சர் நிதிக்காக போராடுகிறார், மொழிக்காக போராடுகிறார், நாடாளுமன்ற தொகுதிக்காக போராடுகிறார். இதன் காரணமாக ஒன்றிய அரசு திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையின் மூலம் சோதனை செய்கிறார்கள்.

ஒரு பக்கம் அமலாக்கத்துறை மூலம் சோதனை செய்கிறார்கள், மறுப்பக்கம் மொழியை திணிக்க பார்க்கிறார்கள், இன்னொரு புறம் நிதி நெருக்கடியை உண்டாக்குகிறார்கள்.

உத்திர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்குகிறார்கள் அந்த நிதியை மக்களுக்கான திட்டங்களுக்கு செலவழிப்பதில்லை மாறாக தங்களுடைய கட்சியையும் ஆட்சியையும் பலப்படுத்துவதற்காக தான் அவர்கள் அந்த நிதியை பயன்படுத்துகிறார்கள்.

பா.ஜ.க அரசை எதிர்க்கும் மாநிலங்களுக்கு நிதியை தருவதில்லை.

அதானி உள்ளிட்ட தங்களுக்கு வேண்டியவர்களுக்காக மட்டுமே ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறார்கள்

மணிப்பூரில் ஒன்றரை ஆண்டு காலம் கலவரம் நடக்கிறது அங்கு ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளார்கள். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் சென்று பார்க்கவில்லை.

அந்த பா.ஜ.க தான் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறுகிறார்கள்.

தமிழகத்தில் தவறு நடந்தால் யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் முதலமைச்சராக தான் நம்முடைய முதலமைச்சர் இருக்கிறார்.

பெரியார் அண்ணா கலைஞர் கொள்கை வழி நின்று நம்முடைய முதலமைச்சர் ஆட்சி செய்து வருகிறார்கள்.

திமுக அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் 5000 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மக்களின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதுதான் எங்களின் முழு குறிக்கோளாக இருக்கிறது. திமுக அரசு செய்த திட்டங்களால் தான் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் 100% வெற்றியை பெற்று வருகிறோம்.

தமிழகத்தின் உரிமைகளை விட்டு விடாத முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர் இருக்கிறார். ஆனால் அதிமுக ஆட்சியின் போது பாஜக என்ன கூறினாலும் அதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்த ஆட்சியாக தான் அதிமுக ஆட்சியில் இருந்தது. இதை மக்கள் உணர்ந்து திமுக ஆட்சியை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் தமிழகத்தின் உரிமையை காப்போம், தமிழகம் போராடும் தமிழகம் வெல்லும், என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும் மாநகர மேயருமான அன்பழகன், தலைமை கழக பேச்சாளர்கள் நாத்திகம் நாகராஜ், மில்லர் மண்டேலா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.