Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் 108 ஆம்புலன்ஸ் சங்கம் எச்சரிக்கை- சம்பளக் குறைப்பை ஏற்க மாட்டோம், விரைவில் தீவிர போராட்டம்

0

திருச்சி 14.11.2024

*108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க முடியாது; போடப்பட்ட 12(3) ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது – திருச்சியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க ஆலோசகர் ஆனந்தன் பேட்டி*

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் காரிய கமிட்டி கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆனந்தன் கூறியதாவது: இந்த காரிய கமிட்டி 3 முக்கிய விஷயங்களுக்காக போடப்பட்டுள்ளது. ஒரு துறையில் இருக்கக்கூடிய தொழிலாளிகள் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தை, எந்த காரணத்தைக் கொண்டும் தன்னிச்சையாக குறைக்க முடியாது. தற்போது GVK EMRI நிர்வாகம் அதை குறைக்க முயற்சி செய்கிறது. 12 மணி நேரம் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளிகளுக்கு 8 மணி நேரம் தான் வேலை கொடுக்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் நியதி. இது குறித்து நாங்கள் வழக்கு போட்டு உத்தரவு வாங்கியுள்ளோம். அந்த உத்தரவுக்கு எதிராக நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளது.

தற்போது நாங்கள் வாங்கிக் கொண்டிருப்பது 12 மணி நேரத்திற்கான சம்பளம். அதை 8 மணி நேரத்திற்காக குறைத்து, மீதியை OT என்று கொடுப்போம் என குளறுபடி செய்கிறார்கள். இதற்கு முன் இருந்த அரசாங்கம், ஒட்டுமொத்தமாக இத்தனை சதவீத ஊதிய உயர்வு என்று கொடுத்து விடும். அதில் எவ்வளவு அடிக்க வேண்டுமோ அதை அடித்து விட்டு மீதியை கொடுப்பார்கள். இப்போது இருப்பவர்கள், நீங்கள் எவ்வளவு சம்பளம் கொடுத்தீர்கள் என்று கணக்கு கொடுத்து, அதன்படி காசு வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். அதனால் இவர்கள் அடிமடியில் கை வைப்பது போல் உள்ளது. மேலும் எந்தவித பலமும் இல்லாத, இதுவரை எந்த விஷயத்தையும் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று உத்தரவு வாங்காத திமுகவின் தொழிற்சங்கத்தை வைத்து, நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி 12(3) ஒப்பந்தம் போட்டுள்ளது.

12(3) ஒப்பந்தம் என்பது எல்லா தொழிலாளிகளையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒப்பந்தம். எல்லா தொழிற்சங்கங்களையும் கலந்து ஆலோசித்து போட்டிருக்க வேண்டும். ஒரே ஒரு தொழிற்சங்கத்தை வைத்து போட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் எந்த வகையிலும் எங்களை கட்டுப்படுத்தாது. ஏனென்றால் சட்டம் எங்களிடம் இருக்கிறது. தொழிலாளர் சக்தி எங்களிடம் இருக்கிறது. ஆயிரத்து எட்டு ஒப்பந்தம் போட்டாலும், தொழிலாளர் சக்தியை திரட்டி அதை உடைத்து தூக்கி எறிந்து விடுவோம்.

தற்போது த.வெ.க.வின் MLA-க்கள், அமைச்சர்கள் எல்லாம் புலம்புவது போல, நிர்வாகம் அரசுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. காலங்காலமாக தன்னிச்சையாக சம்பாதித்து குவித்துக் கொண்டிருந்தவர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்த திமுக தங்களுக்கு சாதகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த சம்பளத்தை திரும்ப வாங்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தை தூக்கி எறிய வேண்டும். எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் பதில் சொல்ல வேண்டிய கட்டாய நிலையை உருவாக்க வேண்டும். அதற்கான மனநிலையை தோழர்கள் மத்தியில் உருவாக்கி, மகத்தான போராட்டங்கள் நடத்தி இந்த போக்குகளை முறியடிக்க உறுதி கொண்டுள்ளோம். அதற்காக தான் இந்த காரிய கமிட்டி போடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.