டாஸை தவிர்த்து வேறெதில் வென்றீர்கள்? பாகிஸ்தானை கிழித்தெடுத்த முன்னாள் இந்திய வீரர்
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் 5வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. துபாயில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
மறுப்பக்கம் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. இதன் காரணமாக அந்த அணி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. அந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாகிஸ்தான் தோல்வி குறித்து காட்டமான கருத்து தெரிவித்துள்ளார
இது குறித்து பேசிய அவர், “ஆம், என் அணியை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். ஆனால் நான் இன்று மகிழ்ச்சியாக இல்லை. யாராக இருந்தாலும் நல்ல போட்டி, கடுமையான போட்டியை பார்க்கவே விரும்புவர். ஆம், நமக்கு நம் சொந்த நாட்டு அணி வெற்றி பெறவே விருப்பம். ஆனால், இன்று நான் இந்தப் போட்டியால் முற்றிலுமாக ஏமாற்றமடைந்துள்ளேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு போட்டி கூட அப்படியில்லை.”
“டாஸ் தவிர்த்து, வேறு எதில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள்? நீங்கள் எங்கள் மனங்களை கூட வெல்லவில்லை. ஆம், போட்டிகளில் நீங்கள் வெற்றி, தோல்வியை சந்திக்கலாம் ஆனால் தோல்விகளிலும் நீங்கள் மனங்களை வெல்லும் சூழல் நிச்சயம் உருவாகும். பாகிஸ்தான் இன்று நீங்கள் அதை கூட செய்யவில்லை,” என்று தெரிவித்தார்.