பண்டிகைக்கு முன்பாவது திறந்தீர்களே! பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு – நான்கு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட காவிரிப் பாலத்தின் கழுகு பார்வை புகைப்படங்கள்
திருச்சி- 15.10.26
பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு பின்பு போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்ட காவிரி பாலம்.. கழுகு பார்வை புகைப்படங்கள்
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சஞ்சீவி நகர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே 63 ஆண்டுகள் பழமையான பாலம் அமைந்துள்ளது. திருச்சி வழியாக வட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அந்த காவிரி ஆற்றுப் பாலத்தை கடந்து செல்லும் அதே போல உள்ளூர் மக்களும் அந்த பாலத்தை போக்குவரத்திற்காக பயன்படுத்தி வந்தனர். பாலம் பழமையானதால் அதை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
இப்பாலத்தின் சீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டது
இதற்காக, கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி முதல் பாலம் முழுமையாக மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இப்பாலம் மூடப்பட்டதால், திருச்சி – சென்னை மார்க்கமாகச் சென்று வரும் அனைத்து வாகனங்களும், அருகில் உள்ள புதிய காவிரிப் பாலத்தின் வழியே இருவழிப் பாதையாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.
பின்னர், பாலத்தின் 14 தாங்கு தூண்களுக்கும், பாலத்தின் தளங்களுக்கும் (Slabs) இடையே சேதமடைந்திருந்த 120 பேரிங்குகளும் (Bearings) முழுமையாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், பாலத்தில் உள்ள 16 ஸ்ட்ரிப்-சீல் இணைப்புப் பகுதிகளும் சரிசெய்யப்பட்டுள்ளன. பாலத்தின் இருபுறமும் உள்ள நடைபாதைகளை வலுப்படுத்தும் பணிகளும், தூண்களைச் சீரமைக்கும் பணிகளும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு முடிக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் போக்குவரத்திற்காக மீண்டும் அந்த பாலம் திறந்து விடப்பட்டது.
நான்கு மாதங்களுக்கு பின்பு பாலம் திறந்து விடப்பட்டதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.