Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் சத்துணவு அமைப்பாளரின் ஆக்கிரமிப்பு- பள்ளிச் செல்லவும் வழியின்றித் தவிக்கும் பிள்ளைகள்… நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?

0

திருச்சி 6.10.2026

*சத்துணவு அமைப்பாளரால் அடைக்கப்பட்ட பாதை- குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு*

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கீழக்குன்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்புப் பாதை அடைக்கப்பட்டுள்ளதாகக்கூறி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கீழக்குன்னப்பட்டி பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் வழக்கமாகப் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை அருகில் உள்ள சத்துணவு அமைப்பாளர் ஒருவர் முள்வேலி அமைத்தும் மரங்களை வெட்டிப் போட்டும் ஆக்கிரமித்து வழிமறித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போதிய பாதையின்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாங்கள் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையைச் சிலர் ஆக்கிரமித்து முள்வேலி போட்டு அடைத்துள்ளனர். இதனால் எங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமலும், அவசரத் தேவைக்கு வாகனங்கள் வர முடியாமலும் தவிக்கிறோம். மழைக்காலத்தில் இப்பாதையைக் கடப்பது மிகவும் கடினமாக உள்ளது. பாதை குறித்துக் கேட்டால் சத்துணவு அமைப்பாளர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு மிரட்டுகிறார். எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு எங்களுக்கு உரிய வழிப்பாதையை மீட்டுத் தர வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.