Trending News Tamil News Website In Trichy

எங்களைப் புறந்தள்ளியதால் தான் திமுக தோற்றது- திமுக கூட்டணியில் இருந்து விலகியது அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம்

0

திருச்சி 2.10.2026

மதிமுக மாநாடு நடத்தி காட்டட்டும்- எங்களை விட அதிக கூட்டம் கூடினால் அவர்கள் சொல்வதை கேட்கிறோம் – வைகோவுக்கு சவால் விட்டு திமுக கூட்டணியில் இருந்து விலகியது அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம்

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவன தலைவர் பொன் முருகேசன் இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ..

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை நடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் திமுகவிற்கு ஆதரவளித்து கூட்டணியில் தொடர்ந்தது. பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெயில் மழை பாராமல், திமுக தலைமையிடம் இருந்து எந்தவித நிதி உதவியும் பெறாமல் சொந்த நிதியிலேயே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டோம்.ஆனால், நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. அதுமட்டுமன்றி பட்டியல் இன மக்கள், தேவேந்திர குல வேளாளர் மற்றும் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு திமுக உரிய வாய்ப்புகளை வழங்கவில்லை.

சமூக நீதி பேசும் திமுகவில் உண்மையான சமூக நீதி இல்லை, போலி சமூக நீதியே உள்ளது. பட்டியல் சமுதாயத்தினர் அரசியல் அதிகாரத்திற்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகிவிட்டது. எங்களைப் புறந்தள்ளியதாலேயே இந்தத் தேர்தலில் திமுக தோல்வியையும் தழுவியுள்ளது.எங்கள் கட்சியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். எங்களிடம் இருக்கும் கூட்டம் கூட மதிமுக தலைவர் வைகோவிடம் இல்லை. நாங்கள் தனித்து பொதுக்கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்துகிறோம். மதிமுக ஒரு மாநாட்டை நடத்தி, எங்களை விட 1 சதவீதம் அதிகமாகக் கூட்டத்தைக் கூட்டிவிட்டார்கள் என்றால் அவர்கள் சொல்வதை நாங்கள கேட்கிறோம். கூட்டம் குறைவாக இருக்கும் வைகோவை நம்பி கூட்டணி வைக்கும் திமுக, எங்களைப் புறக்கணிப்பது ஏன் என்று புரியவில்லை.

இனியும் திமுக கூட்டணியில் பயணிப்பது சரியாக இருக்காது என்பதால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம். எங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் அல்லது வாரியக் குழு தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் மூன்று தேர்தல்களாக எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. எங்கள் சமுதாய மக்கள் தமிழகம் முழுவதும் பரந்து விரிந்து காணப்படுகிறார்கள். இனி யாரையும் நம்பி பயணிக்க சாத்தியமில்லை.

அடுத்தகட்டமாக யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரைவில் பொதுக்குழு கூடி முடிவெடுக்கப்படும். மேலும், தற்போது நடைபெறவுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் தனித்துப் போட்டியிடும் எனத் தெரிவித்தார்.இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்டச் செயலாளர்கள் பெரியசாமி, சக்திவேல், வடிவேல்மகாமுனி, முருகவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.