திருச்சி ரயில்வே போலீஸாரிடம் தப்ப முடியாது- SI கவிதா டீமின் அதிரடி வேட்டை — 3 பவுன் நகை, 2 போன்கள் மீட்பு-26 வயது திருடன் சிறையில் அடைப்பு
திருச்சி 1.10.2026
*திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் உடைமைகள் திருட்டு -26 வயது வாலிபர் கைது — 3 பவுன் நகை, 2 செல்போன்கள் பறிமுதல்*
திருச்சி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கியபோது தவறவிட்ட 3 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 கைபேசிகளைத் திருடிய வாலிபரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.சென்னை பழைய பெருங்களத்தூர், சொர்க்கம் அவன்யூ பகுதியைச் சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் தமிழ் செல்வன் (வயது 36). இவர் கடந்த 27.09.2026 அன்று காலை 04:40 மணியளவில், சென்னை – மங்களூர் விரைவு ரயிலில் (வண்டி எண்: 16159) தனது குடும்பத்தினருடன் பயணம் செய்து திருச்சி ரயில் நிலையத்தின் நடைமேடை எண் 4-ல் வந்து இறங்கினார்.அப்போது, தான் கொண்டு வந்திருந்த கைப்பை தவறவிட்டதை உணர்ந்தார். அந்தப் பையில் 2 விவோ (Vivo) ஸ்மார்ட்போன்கள், 2 பவுன் தங்கச் செயின் மற்றும் 1 பவுன் கைச் செயின் என மொத்தம் 3 பவுன் நகைகள் இருந்தன. இது குறித்து தமிழ் செல்வன் திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் செல்வி கவிதா வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இன்று (01.10.2026) மாலை விராலிமலை ரயில்வே பாலத்தின் அடியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த வாலிபர் ஒருவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, பக்கிரி வாடி தெருவைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்பவரின் மகன் ஆதில் முகமது (வயது 26) என்பதும், தமிழ் செல்வனின் கைப்பையைத் திருடியதை ஒப்புக் கொண்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஆதில் முகமதுவைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர், எதிரியை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.