திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்- 4 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் ஆக்கிரமித்ததாகக் குற்றச்சாட்டு
திருச்சி 21.09.2026
இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாம் கூட்டத்தில் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம், கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்…
மனு அளித்த கையோடு தங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்ற வேதனையில் முருகேசன் திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு அவரைத் தடுத்து நிறுத்தி அவர் மேல் தண்ணீர் ஊற்றி அவரை சமாதானப்படுத்தினர்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முருகேசன் கூறுகையில்…
திருச்சி மாவட்டம் கல்பாளையம் கிராமத்தில், தங்கள் முன்னோர்களான வளியான், மருதன், மொட்டையன் ஆகிய மூன்று பேரின் பெயரில், இறந்த மாடுகளை அடக்கம் செய்யும் ஊழியத்திற்காக ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த 4 ஏக்கர் நிலத்தை வட்டாட்சியர் RDO மற்றும் DRO ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் போல ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர்.இதனைத் தட்டிக் கேட்கும் பொதுமக்கள் மீது, காவல் துறையைப் பயன்படுத்திப் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு ஆட்சிகளிலுமே இது குறித்து மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2001-ஆம் ஆண்டு தய்யல் தாசில்தார் என்பவரால் போலிப் பட்டா உருவாக்கப்பட்டது. முன்னோர்கள் மூன்று பேரின் பெயருடன் சம்பந்தமில்லாத நபர்களைச் சேர்த்து, சேகர் என்பவரின் பெயர் நான்காவதாக இணைக்கப்பட்டது. பின்னர் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்ட போது, அப்போதைய DRO பாலாஜி மற்றும் ராஜலட்சுமி அம்மாள் ஆகியோர் பல லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாகப் பெயர்களை நீக்கியும் சேர்த்தும் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளனர்.இந்த நிலம் நத்தம் புறம்போக்கு நிலம் அல்ல என்றும் இது ரயத்துவாரி புஞ்சை மற்றும் மைனர் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்ட நிலம்.கடந்த 2015-ஆம் ஆண்டு கணேசன் தாசில்தார் உயர் நீதிமன்ற உத்தரவைத் தள்ளுபடி செய்த நிலையில், வாரிசு சான்றிதழ் இல்லாத காரணத்தால் 3 ஆண்டுகள் போராடி, நீதிமன்றம் மூலமாக 3 தலைமுறைக்கான வாரிசு சான்றிதழைப் பெற்றேன். கடந்த 2014 முதல் 2026 வரை தொடர்ந்து போராடி வருவதோடு, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.லஞ்ச ஊழலற்ற ஆட்சியை தரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் எங்கள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும். மூன்று வேளை உணவிற்கே வழியின்றி வாழும் ஏழை எளிய மக்களின் நிலத்தை உடனடியாக மீட்டுத்தர வேண்டும். மேலும், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட DRO பாலாஜி மற்றும் ராஜலட்சுமி அம்மாள் ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.