Trending News Tamil News Website In Trichy

டிராகன் விமர்சனம்…

0

பிளஸ் டூவில் 96 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த டி.ராகவன் (பிரதீப் ரங்கநாதன்), தான் ரொம்ப நல்லவனாக இருந்ததால் நிராகரித்த பெண்ணால் மனம் வெறுத்து, கல்லூரியில் சேர்ந்தவுடன் கெட்டவனாக மாறி டிராகனாகப் பிரபலமாகிறார். ஒழுங்காகப் படிக்காத அவர் 48 அரியர் வைக்கிறார். நல்லவனாக இருக்க முடியாத அவரை நிராகரிக்கும் அனுபமா பரமேஸ்வரன், தனது காதலை பிரேக்அப் செய்கிறார். இதனால், எப்படியாவது வாழ்ந்து காட்ட வேண்டும் என்று முடிவு செய்யும் பிரதீப் ரங்கநாதன், போலி சான்றிதழ்களை வைத்து சாப்ட்வேர் கம்பெனியில் சேர்ந்து லட்சக்கணக்கில் சம்பாதித்து கார், வீடு வாங்கி ஆடம்பரமாக வாழ்கிறார்.

இந்நிலையில், மல்டி மில்லியனர் கே.எஸ்.ரவிகுமார் மகள் கயாடு ேலாஹருக்கும், பிரதீப் ரங்கநாதனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அப்போது கல்லூரி முதல்வர் மிஷ்கின், போலி சான்றிதழ்களின் மூலம் பிரதீப் ரங்கநாதன் செய்த தில்லுமுல்லுவை கண்டுபிடிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது நெஞ்சை உலுக்கும் கிளைமாக்ஸ். ‘லவ் டுடே’ மூலம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த பிரதீப் ரங்கநாதன், காதல் முறிவின்போதும், மீண்டும் காதல் மலரும்போதும் மாறுபட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார்.

அப்பா மரியம் ஜார்ஜ், அம்மா இந்துமதியிடம் காட்டும் பாசம், மிஷ்கின் பேச்சுக்கு கட்டுப்படும் பயம், முன்னாள் காதலியே தனது வகுப்புக்கு லெக்சரராக வந்ததை தாங்க முடியாத கோபம், புதிய காதலியை ஏமாற்றியதை மறைக்கும் சோகம், தன்னால் ஒருவனின் வேலை பறிபோனதை மீட்க எதிர்கொள்ளும் மனம் என்று, வெரைட்டியான நடிப்பை வெளிப்படுத்தி இளைஞர்கள் மனதில் நிறைகிறார். அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் இருவரும் அழகாக மட்டுமின்றி அற்புதமாகவும் நடித்துள்ளனர்.

திடீர் கேரக்டர்களில் சினேகா, இவானா கவனத்தை ஈர்க்கின்றனர். கல்லூரி முதல்வர் மிஷ்கின், நேர்த்தியான நடிப்பில் மிளிர்கிறார். கே.எஸ்.ரவிகுமார், கவுதம் வாசுதேவ் மேனன், பி.எல்.தேனப்பன், விஜே சித்து, ஹர்ஷத் கான் ஆகியோர் அந்தந்த கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர். கிளைமாக்சில் மரியம் ஜார்ஜ் ஸ்கோர் செய்து, அப்பா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல வைக்கிறார்.

‘ஓ மை கடவுளே’ அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ளார். இன்றைய தலைமுறைக்கு அவசியம் தேவைப்படும் அற்புதமான மெசேஜுடன் சிறந்த கமர்ஷியல் படமாக உருவாக்கியுள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் லியோன் ஜேம்ஸ் மிரட்டியுள்ளார். சிம்பு பாடிய பாடல் செம எனர்ஜி. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். ரிப்பீட்டாகும் கல்லூரி காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. குட்டி டிராகன் கேரக்டர் ஆரம்பத்தில் எரிச்சல். படத்தின் முதல் 20 நிமிடங்கள் ஒட்ட முடியவில்லை. இந்த குறைகளையெல்லாம் தாண்டி இரண்டாம் பாதியில் படம் நம்மை ஈர்த்துப்போடுகிறது.

Leave A Reply

Your email address will not be published.